தொழில்கள்

பொட்டல்புதூர் கிராமத்தின் மிக முக்கியத் தொழில்களாக, விவசாயம் - நெசவு - வியாபாரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

விவசாயம்

இக்கிராமத்தின் பெரும்பான்மையான பகுதி விவசாயத்திற்கு ஏற்ற மண் வளம் கொண்ட பூமியாகும். விவசாயத்திற்குத் தேவையான நீர் வளத்தை இயற்கையாகவே மிகத் தாராளமாகப் பெற்றிருக்கிறது. ஆழமான கிணறு தோண்டித்தான் தண்ணீர் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பூமியில் பத்தடியிலிருந்து - பதினைந்தடிவரை தோண்டினாலே நீரூற்றைப் பார்த்து விடலாம். பின் நீர் தேக்கத்திற்காக ஆழமும், அகலமும் படுத்தினால் போதும்.

வீரிய விளைச்சலுக்குத் தகுந்த பூமியாகிய பொட்டல்புதூர் கிராமத்தில் விவசாயத் தொழில் அமோகமாக இருந்தது. (அப்ப.. இப்போ விவசாயத்தில் அமோக விளைச்சல் இல்லையா..? என்றால் இதற்கு கொஞ்சம் யோசித்துதான் சொல்ல வேண்டும்.)

கல்லை விதைத்தாலும் முளைத்துவிடும் எனப் பொட்டல்புதூர் கிராம விளைநில மண்ணைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். எதை விதைத்தாலும் பக்குவமாக வளர்த்து, ஆளாக்கி பலனைப் பெற்றுத் தந்துவிடும்.

வாலு போச்சு, கத்தி வந்தது... என்கிற மாதிரி அதிரடி விளைச்சலுக்கு ஆசைப்பட்டு விளை மண்ணில் நவீனங்களைக் கலந்து ஒழுங்காக விளைந்து கொண்டிருந்த மண்ணைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டோமோ. என்று முத்த விவசாயிகள் புலம்புகிறார்கள்.

விவசாயத் தொழிலை மட்டுமே செய்து வளமான வாழ்க்கையைப் பெற்று வந்த காலம் மாறி இப்போது விவசாயத் தொழிலில் நடை லாபம், சாக்கு (கோணி) மிச்சம்! என்ற நிலைதான் உள்ளது. என்கிறார் ஒரு பண்பட்ட விவசாயி.

விளக்கம்

ஒருவர் தேங்காய் வியாபாரம் செய்வதற்காக ஒரு தேங்காய் இரண்டு ரூபாய் வீதம் ஐம்பது தேங்காயை நூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்தார். ஐம்பது தேங்காய் மொத்தமாக இருந்ததால் அவற்றைக் கொண்டு செல்ல ஒரு சாக்குப் பை (கோணிப் பை) இலவசமாகக் கிடைத்தது.

இரண்டு மைல் தொலைவில் உள்ள பக்கத்து ஊர் சந்தையில் ஒரு தேங்காய்க்கு இரண்டே கால் ரூபாய் வீதம் விற்க முடிவு செய்து விலை நிர்ணயித்தார். வாடிக்கயைாளர்கள் எவருமே இரண்டு ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று வாங்காமல் விலகிச் சென்றனர். இறுதியில் ஒரு தேங்காய் இரண்டு ரூபாய் என்று கொள்முதல் செய்த விலைக்கே விற்க நேர்ந்தது.

வியாபாரத்துக்காக சந்தைக்கு சென்று வந்த நடை லாபம்!

தேங்காய் கொள்முதல் செய்ததில் இனாமாகக் கிடைத்த சாக்குப் பை மிச்சம்!

ஆயினும் விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள் விவசாயம் செய்து பொருளீட்டுகிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது!

நெசவு

பொட்டல்புதூர் கிராமத்தில் இருவகையான நெசவுத் தொழில்கள் பிரசித்திப் பெற்றது.

ஒன்று: கைத்தறி ஆடைகள் நெய்தல்.

கைத்தறி நெசவுத் தொழில் ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமுதாயத்தின் குடும்பத் தொழிலாகவே இருக்கும். ஆண், பெண், மற்றும் சிறுவர், சிறுமியர் ஆகிய குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கைத்தறி நெசவுத் தொழிலுக்கான தங்களது பங்களிப்பை செலுத்துவார்கள்.

இக்கிராமத்தில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தில் 60 சதவீதம் வரை கைத்தறி நெசவுத் தொழிலிலேயே தங்கள் வாழ்வாதாரத் தேவைகளைத் தேடிக்கொண்டார்கள். அதில் தன்னிறைவும் பெற்றார்கள். ஒரு வீட்டிற்கு இரண்டு கைத்தறிகள் பொருத்தப்பட்டிருக்கும். முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களுக்குள் பகலில் நடந்தால் தெருவின் இறுதிவரை கைத்தறிகளின் இயக்கத்தின் சல்லட் - புல்லட் என்ற ரிங்கார சத்தத்தைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே நடக்கலாம்.

வேஷ்டி, கைலி, துண்டு, சேலை மற்றும் இரண்டாம், மூன்றாம் தர பட்டாடைகளும் கைத்தறியில் நெய்து ஆடைகள் ஆக்கப்படும். பொட்டல்புதூர் கிராமத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கைத்தறி ஆடைகளின் நெசவுத் தொழில் மிக ஓங்கி இருந்தது. நவீன இயந்திரத்தறி ஆடைகளின் வரவுக்கு முன்பு கைத்தறி ஆடைகளுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது (இதை விட்டால் வேறு வழியில்லை)

கம்ப்யூட்டர், கிராபிக்ஸ் என ஆடைகளில் நவீனங்கள் புகுந்த பின் கைத்தறி ஆடைகளின் உற்பத்தி இருந்த அளவிற்கு விற்பனையில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. விளைவு, கைத்தறி நெசவைக் கைவிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ஒவ்வொரு குடும்பமும் கைத்தறி உழைப்பிற்கு முழுக்குப் போட்டு வேறு தொழிலுக்கு மாறிக் கொண்டார்கள்.

ஆயினும் பொட்டல்புதூர் கிராமத்தில் இன்றும் ஒரு சில கைத்தறியின் சத்தங்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பல தலைமுறையாக செய்து வந்த கைத்தறித் தொழிலைக் கைவிட மனமில்லாமலும், வேறு தொழில் ஏதும் தெரியாது என்பதாலும் முதுமையான நெசவாளிகள் சிலர் இன்னும் கைத்தறியில் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னதான் ஆடைகளில் நவீனங்கள் புகுந்து மக்களை ஆக்ரமித்தாலும், கைத்தறி ஆடைகளை விரும்பும் மக்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.



இரண்டு: கைத்தறி பாய்கள் நெய்தல்.

சுமார் 30 சதவீதம் முஸ்லிம் குடும்பத்தில் பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் ஆகியவர்கள் கைத்தறி பாய் நெசவுத் தொழிலில் பங்கெடுப்பார்கள். பாய் நெய்தலில் குடும்பத்து ஆண்கள் ஈடுபடுவதில்லை.

ஆடைகள் நெய்தல், பாய்கள் நெய்தல் இவ்விரண்டு தொழிலையும் ஒரே குடும்பத்தில் செய்யப்படுவதில்லை. கைத்தறி அடைகள் நெய்யும் குடும்பத்தில் பாய்கள் நெய்வதற்கான கைத்தறி அமைக்கப்படுவதில்லை. கைத்தறி பாய்கள் நெய்யும் குடும்பத்தில் ஆடைகள் நெய்வதற்கான கைத்தறி பொருத்தப்படுவதில்லை. இரண்டு நெசவுத் தொழிலிலும் ஒரு குடும்பம் ஈடுபட்டு குழப்பிக் கொள்வதில்லை. இருவேறுபட்ட கைத்தறிகளை அமைப்பதற்கான இடவசதியை வீடு கொண்டிருக்கவில்லை.

(இவ்விரண்டு நெசவுத் தொழிலிலும் முஸ்லிம் சமுதாயம் மட்டுமே ஈடுபட்டிருந்தார்கள் பிற சமுதாயத்தவர்கள் இந்நெசவுத் தொழில்களை மேற்கொள்வதில்லை. அவர்களுக்கென்று சிறு தொழில்களாக வேறு தொழில்கள் செய்து வந்தார்கள் இது பற்றி பின்னால் பார்ப்போம்.)

பொட்டல்புதூர் கிராமவாசிகளாகிய முஸ்லிம் சமுதாயத்துக்கு வாழ்வாதாரத் தேவைக்காக பிழைப்புத் தேடி எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. உள்ளுரிலேயே நெசவுத் தொழில்கள் அவர்களின் வாழ்க்கை வசதிக்கு மிகத் தாராளமாகவே இருந்தது.

கைத்தறி ஆடை நெசவு நலிந்தது போல், என்று சொல்ல முடியாது என்றாலும் கைத்தறி பாய் நெசவும் சற்று சரிவு விழத்தான் செய்தது. முதல் தர, இரண்டாம் தர, முன்றாம் தர பாய்கள் மற்றும் வண்ணக் கலரில் மணவறைப் பாய் என்று பலவகையானப் பாய்களின் நெசவுகள் நடந்த பொட்டல்புதூர் கிராமத்தில் சில பாய் நெய்யும் தறிகளைத் தவிர மற்றவைகள் கைவிடப்பட்டன. அதற்கு பகரமாக பாய் கட்டும் சிறு தொழில் மேற்கொள்ளப்பட்டது. (மற்றவை சிறு தொழில் பகுதியில் பார்ப்போம்)


அடுத்து வியாபாரத் தொழில் பற்றி..

 

மறுமொழிகள் :
ஏ ராசா... எப்ப ராசா வந்தீக வலை பதிய..? எனக்கு நெசமாவே தெரியாது ராசா.. அடிக்கடி எழுதுங்க ராசா.. உங்க கிட்ட நல்ல விசயங்கள் நெறைய இருக்கு ராசா... தயங்காம பதியுங்க ராசா!

அன்பு அண்ணாச்சி,
மூர்த்தி.
http://www.muthamilmantram.com
 
Post a Comment

<< கடைசியாக பதிந்த கட்டுரைக்கு செல்