கண்ணீரில் மூழ்கிய தாமரைகள்!

நீதி மன்றம் நிசப்தம் சுவாசித்தது
குற்றக் கூண்டில் நிற்கும்
இவளோ..
வறுமைப் புயலில் சருகாய் உதிர்ந்தவள்
இவள் மீது..
சுமத்தப்பட்டகுற்றச் சிலுவையோ
கேட்பவர் இதயத் துடிப்பை
சில வினாடி
கேட்காமல் செய்துவிடும்.

தான் பெற்றத்
தளிர்கள் ஐந்தைத்
தானே கொன்றாளாம்
அதுவும் தண்ணீரில்

அரசு வக்கீல்
வாதத் திறமைக்கோ
அவசியம் ஏற்படவில்ல
இதோ..
கசப்பான வாழ்வைக்
கண்ணீரில் பிழிகிறாள்
கேளுங்கள்..
''வறுமை நெருப்பின்
வாதை தாளாமல்
அறும்புகள் ஐந்தையும்
நான் தான்
மரணப்பள்ளத்தின்
மடியில் விதைத்தேன்..ஐயா"

நீதிபதியோ
நெகிழும் நெஞ்சினர்
இரங்கத்தக்க இவளா
இரக்கமின்றிகொலை
செய்தாள்..
அந்த ஏழ்மையின்
வார் படத்தை
ஈரமாய் பார்த்து
இதயத்தால் கேட்டார்..

''கொன்றதுதான் கொன்றாயே
இப்படிக்
கொடூரமாகவா..
அந்தத் தாமரை மொக்குகளை
தண்ணீரில் மூழ்கடிப்பது

ஒன்றோ இரண்டோ
ரூபாய் கொடுத்தால்
எளிமையாய்க் கொல்ல
எத்தனையோ மருந்துண்டே..
மூட்டைப்பூச்சி மருந்தே போதுமே
மூச்சு யாத்திரைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
இப்படியா..
மூழ்கடித்து நீரில்
மூர்க்கமாய் கொல்வது''..?

குனிந்த இவள் நிமிர்ந்தாள்
ஏறிட்டக் கண்களில்
நீரிட்ட ஈரம்
இதழ்களின் வரட்சியில்
இகழ்ச்சியின் சாரம்

''அந்த ஒன்றோ இரண்டோ
இருந்திருந்தால்
நான்..
குழந்தைகளைக்
கொன்றேயிருக்க மாட்டேனே ஐயா''!
நீதிபதியோ
நிலை குலைந்து போனார்
நீதி மன்றமோ
மீண்டும் நிசப்தம் சுவாசித்தது!

(எழுதியவர் யாரோ!)